சுகமும் சுதந்திரமும் தொலைந்துபோனது எப்படி? வெள்ளை எல்லாம் பால் என்று எண்ணி நாம்
வெள்ளைக்காரன் சொன்னதையே செய்தோம். அறியாதவர்களை எஜமானராக்கினோம். புகைத்தோம், குடித்தோம், கிண்டலடித்துக் குதூகலித்தோம். குற்றம் குறை சொல்ல ஒற்றைக்காலில் நின்றோம்.
நிறைகளைச் சொல்ல நிறைய யோசித்தோம். சத்துமாப் பேணியில் தான் சத்து என்று சத்தியம் செய்தோம்.
சோரும் போதெல்லாம் சோடா குடித்தோம் ஆசிரியர் சேவையை அவதூறாய்ச் சொன்னோம் தாதியரை என்றும் தரக்குறைவாய்ப் பேசினோம் வைத்தியர்களை வாயார வைத்தோம் மருந்து விசிறுவதால்
விவசாயியைக்கூட விட்டாவைத்தோம். வர்த்தகர்களை வார்த்தைகளால் அர்ச்சித்தோம். மாணவரின் ஒழுக்கத்தை மணிக்கணக்காய் விமர்சித்தோம். நண்பர்களை எதிரியாய்க் கொண்டோம். எம்மை ஏய்பவர்களுக்கு எள் என முன் எண்ணெய் ஆனோம். பந்தம் பிடிப்பதற்காய் சொந்தக் கோவணத் துணியையும் கொழுத்தினோம்.எமது தேசம் மட்டும் உருப்படாது என்று உள்ளம் உடைந்து மனம் வெதும்பி
எம் சுகத்துக்கு நாமே கொள்ளி போட்டோம்.
நாம் மீண்டும் சுகம்பெற்று ஆகவேண்டும் சிந்திப்போம்.உழைப்பின் என்ன வீதத்தைக் கொடுத்து உதவினோம். எத்தனை மரங்களை நட்டோம்.என்னத்தை இயற்கையாய்ப் பயிரிட்டோம். எம் எத்தனை உடல் உறுப்புக்களை இறந்த பின்னாவது கொடுக்கத் துணிந்தோம். எத்தனைபேர் துயர் துடைத்தோம். எத்தனை தடவை இரத்ததானம் செய்தோம்.வைத்தியசாலையின் நெருக்கடிகள் தீாத்துவைக்க உடற்பயிற்சி செய்தோமா? உடல்நிறை பேணினோமா? சீனி தவிர்த்தோமா? சீராக வாகனம் விட்டோமா? புகைப்பதையும் குடிப்பதையும் துறக்கத் துணிந்தோமா? மற்றவனுக்காய் அழுதோமா? மன்னிப்புக்கள் கேட்க மனம் துணிந்தோமா?பெற்றவரை உற்றவரை உயிர்போலக் காத்தோமா?
எங்கும் நல்ல சிற்பங்கள் உதித்திட எம்மை நாமே செதுக்குவோம் மற்றவனை செதுக்குமுன். அடுத்தவனுக்குப் பட்டம் சூட்டுமுன் எமக்கு நாமே பட்ட தீட்டித் துலங்குவோம்.வெள்ளையனெல்லாம் தன்னைத்தானே செதுக்கி தானே வளர்ந்துவர நாம் மற்றவனைச் செதுக்க உளி கொண்டு துரத்துவதா? பட்டவை போதும் பண்படுவோம். ஒரு சுகமான தேசத்துக்காய் ஒன்றாகி ஒற்றுமையாய் உழைப்போம் உறுதி கொள்வோம். சிரி, கொடு, எழு, உழை, உடு, உழு உண், அழு, அரவணை, படி, பண்பாட்டைக் காப்பாற்று. நிச்சயம் சுகம் நிதர்சனமாகும்.
சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்